பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலையுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதற்கான டோக்கன்களும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பொங்கல் பரிசு விநியோகத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ரேசன் கடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்தவகையில் அதிரையில் உள்ள ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று அதிரை கடற்கரைத்தெருவில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற பரிசுத்தொகுப்பு தொடக்க நிகழ்வில், அதிரை திமுக கிழக்கு செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான இராம. குணசேகரன், 22வது வார்டு செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான செய்யது முஹம்மது, கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் அஹமது ஹாஜா, செயலாளர் முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் நிகழ்வை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினர். இந்நிகழ்வில் 22வது வார்டுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.




