அதிராம்பட்டினம் சேது ரோடு முத்துப்பேட்டை சாலையில் உள்ள HP பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் விக்னேஷ் (42) தனியாக பணியில் இருந்துள்ளார். அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்த சிலர் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு போன் பே இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். போன் பே இல்லை என விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
அப்போது விக்னேஷிடம் மற்றொருவர் கழிவறை எங்கே இருக்கிறது என கேட்டுள்ளார். இதனால் பெட்ரோல் பங்கின் பின்புறம் அவரை அழைத்துச் சென்று கழிவறையை விக்னேஷ் காண்பித்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த நபர் விக்னேஷிடம் இருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு விக்னேஷை கழிவறைக்குள் தள்ளி கதவை பூட்டிவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பியோடிவிட்டனர் என ஊழியர் விக்னேஷ் கூறியுள்ளார் அதில் ₹50 ஆயிரம் ரூபாய் இருந்ததாகவும் போலிசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் துறையினர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவலர்கள் சுற்றுவட்டாரத்தில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த மசூத் (22) மற்றும் மூன்று சிறுவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் நாங்கள் பெட்ரோல் போட்ட பிறகு ஊழியர் விக்னேஷை கழிவறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு கல்லாவில் இருந்த ஆயிரம் ரூபாயை மட்டும் தான் எடுத்து சென்றோம் என ஒப்பு கொண்டனர்.
ஆனால் ஊழியர் விக்னேஷ் கொடுத்த புகாரில் ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டதாக கூறியிருந்ததால் விக்னேஷிடம் காவல்துறையினர் கிடுக்குபிடி விசாரணையில் இறங்கினர்.
அப்போது அந்த நான்கு பேரும் ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் தான் எடுத்துச் சென்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பெட்ரோல் பங்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை நான் தான் திருடினேன் என விக்னேஷ் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் விக்னேஷ்,3 சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.