உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உயிர்களை காப்பாற்றுவதற்கான அத்தியாவசிய பயிற்சியை தனி நபர்களுக்கு அளிப்பதையும் இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளது.
முதலுதவி செய்வதற்கும் மனித நேயம், சமூக அக்கறை, சக உயிரினத்திடம் அன்பு செலுத்துதல் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள்தான் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள், அவர்களை ஊக்கப்படுத்தும் நாளாகவும் மேலும் முதலுதவி ஒருவருக்குள் பொறுப்புணர்வை விதைத்து, மற்றவர்களை கவனித்துக் கொள்ளும் மனப்பான்மையை மேம்படுத்துகிறது, இதனால் உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்க இந்நாள் உதவுகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. விபத்துகளில் சிக்கிய அதிகமானோர் முதலுதவி கிடைக்காமலேயே உயிரிழந்திருக்கிறார்கள். ஒருவர் விபத்தாலோ அல்லது வேறு ஏதும் காரணங்களாலோ பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால் தயங்காமல் அவருக்கு முதலுதவி செய்ய நாம் முன்வர வேண்டும்.
தொழில்முறை மருத்துவ உதவி எப்போதும் சிறந்தது ஆனால் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு அவசர காலங்களில் உயிர்வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கும், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை முதலுதவி திறன்கள் பற்றி பார்ப்போமா!!
ஒருவர் விபத்தில் அடிபட்டால், அவரது கைகால்கலைப் பிடித்து அலேக்காகத் தூக்கி ஓரமாகக் கொண்டு செல்வார்கள். இதை நாம் பார்த்திருக்கக்கூடும், இப்படிச் செய்வதால் அடிபட்டவரின் இடுப்பிலுள்ள குறுக்கெலும்பு (பெல்விஸ்) பாதிக்கப்படலாம். அந்தவழியே, அதிக அளவில் ரத்தம் வெளியேற வாய்ப்புண்டு எனவே, அடிபட்டவரைத் தூக்கும்போது மிகுந்த கவனம் தேவை. நான்குபேரும் ஒருங்கிணைந்து தூக்கவேண்டும். விபத்து மூலமாக ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் கண்டால் முதலில் பாதிக்கப்பட்டவர் உணர்வுடன் இருக்கிறாரா என்பதை பரிசோதிக்க வேண்டும். அவர் சுவாசிக்கிறாரா என்பதைச் சரிபார்க்கவும் மேலும் எவ்வகை பாதிப்பானாலும், பாதிக்கப்பட்டவரை சூழ்ந்து நிற்கக்கூடாது காற்றோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.
சுவாசம் நின்றுவிட்டால் மார்பை அழுத்தி மீண்டும் சுவாசத்தை மீட்டெடுக்கும் சி.பி.ஆர். முதலுதவி உதவுகிறது. இதுபற்றி நன்கு தெரிந்துகொண்டு முதலுதவி செய்வது நல்லது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
கடுமையான இரத்தப்போக்கு உயிருக்கு ஆபத்தானது. காயத்தின் மீது சுத்தமான துணியால் அழுத்தம் கொடுத்து, காயமடைந்த பகுதியை இதய மட்டத்திற்கு மேலே உயர்த்தவும், இரத்தப்போக்கு குறைய உதவும்.
அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்தைரியத்தை அளிக்க வேண்டும்* பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
பாதிக்கப்பட்டவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால் அவசரப்பட்டு பாதிக்கப்பட்டவரை தூக்காமல், பொறுமையோடு கையாள வேண்டும், காயமடைந்த பகுதியை அசையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எலும்பு மற்றும் சுற்றியுள்ள திசுக்களுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்க அசையாமை மிகவும் முக்கியமானது. தேவைப்பட்டால் ஸ்பிளிண்ட் பயன்படுத்தலாம் மேலும் உள் முறிவாக இருந்தால் ஐஸ் பேக் பயன்படுத்தலாம் அல்லது ஐஸ் கட்டியை ஒரு துணியால் சுற்றி பயன்படுத்தலாம், ஐஸ் வீக்கத்தைக் குறைக்கவும், அந்த இடத்தை மரத்துப் போகவும், வலி நிவாரணம் அளிக்கவும் உதவும்.
பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட நபராக இருந்தால், நச்சுள்ள பாம்பே கடித்திருந்தாலும் கூட பதற்றமடையக் கூடாது. கடித்தது விஷப் பாம்பு இல்லை என்றும் சாதாரண பாம்புதான் கடித்தது என்று சொல்லி பாம்பு கடித்தவருக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டும். அதுதான் பாம்பு கடித்தவரை உயிர் பிழைக்க வைக்கும் முதல் மருந்து. கடித்த நபரை அமைதியாகவும், பதட்டமின்றியும் வைத்திருங்கள். கடிபட்ட இடத்தில் ஓடும் நீரில் கழுவலாம். கடிபட்ட இடத்தில் விஷத்தை உறிஞ்சவோ, வெட்டவோ, இறுக்கமான கட்டு போடவோ கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்ட நபராக இருந்தால் காயப்பட்ட இடத்தில் குறைந்தது 10 நிமிடங்களுக்கு குளிர்ந்த, ஒழுகும் தண்ணீரில் வைக்கவும் அல்லது குளிர்ந்த தண்ணீரில் முக்கி எடுக்கவும், கொப்புளங்கள் உருவானால் அவற்றை உடைக்கக் கூடாது, பின்னர் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமான, ஒட்டாத துணியால் அல்லது மருந்து கட்டு (bandage) போட்டு காயத்தை மூடவும். கடுமையான தீக்காயங்களுக்கு, மருத்துவமனையில் தொழில்முறை உதவியை நாடுவது மிகவும் முக்கியம்.
முதலுதவி என்பது தெய்விகப்பணி. மரணத்தின் விளிம்பில் இருப்போருக்கு உயிரை மீட்டுத்தரும் அரும்பணி. அதை மிகவும் கவனத்தோடும் பொறுப்பு உணர்வோடும் செய்ய வேண்டும். முதலுதவி பற்றி நன்கு அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடன் இருப்பவர்களுக்கு ஆபத்து வரும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை இந்நாளில் அனைவருக்கும் வலியுறுத்தலாம்.
“ஒருவரை வாழ வைத்தவர் உலகில் உள்ள அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” -குர்ஆன் 5:32
அ.அக்லன் கலீஃபா அதிரை நகர மருத்துவ அணி செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.