அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை தெரிவித்தார்.
அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஆயிஷா கிராண்ட் மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது, அதிராம்பட்டினம் அருகே ராஜாமடத்தில் ரூபாய் 200 கோடி மதிப்பில் தமிழக அரசு அமைக்கும் கடல் உணவு மீன் பதப்படுத்துதல் பூங்கா தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் எனவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனவும் கூறினார்.
டெல்டாவில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய ஒரே ரயில் நிலையமாக அதிராம்பட்டினம் திகழ்கிறது எனவும் கடந்த காலங்களில் அதிராம்பட்டினம் நிலையத்தில் இருந்து மீன்,இறால்,கருவாடு, தேங்காய், உப்பு போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டினார்.
எத்தனை மனுக்கள் சமர்ப்பித்தாலும், எத்தனை அதிகாரிகளை சந்தித்தாலும் கண்டுக்கொள்ளாத ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட்டோம் என எம்எல்ஏ எச்சரித்தார்.
கூட்டத்தில் சங்க தலைவர் எம்.எஸ். சஹாபுதீன், செயலாளர் அப்துல் ரஜாக், பொருளாளர் இம்தியாஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.








