பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ‘தேர்வு நிலை நகராட்சியான பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 73,135 ஆகும்.
தற்போதைய பழைய பேருந்து நிலையம் 27 பேருந்து நிறுத்தங்களுடன் கூடிய “பி” கிளாஸ் பேருந்து நிலையமாக பட்டுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் இயங்கி வந்தது.
அதிகமான பேருந்துகள் நகர் பகுதியில் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதை போக்கிடும் வகையில் முதல்வரின் உத்தரவின்படி பட்டுக்கோட்டை நகராட்சி நரியம்பாளையம் பகுதியில் 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.50 ஏக்கர் பரப்பளவில் மேம்படுத்தப்பட்ட ஏ வகுப்பு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகளை நிறுத்தும் வசதி, 120 கடைகள், 2 உணவகங்கள், குடிநீர் வசதி, 2 இடங்களில் இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி, ஒரு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, முன்பதிவு அறை, 3 பயணிகள் காத்திருப்பு அறைகள் மற்றும் 4 இடங்களில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இந்த புதிய பேருந்து நிலைய திறப்பு விழாவில் அமைச்சர்கள் கே. என். நேரு, எஸ். ரகுபதி, கோவி. செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி. ஆர்.பி. ராஜா, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இஆப, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரசொலி, கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் கா. அண்ணாதுரை, துரை. சந்திரசேகரன், என். அசோக்குமார், டி.கே.ஜி. நீலமேகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

















