அதிராம்பட்டினம் தாலுக்கா உருவாக்கம் தொடர்பான அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது. இருந்தாலும், சில அரசியல் தலையீடுகள் காரணமாக அறிவிப்பு செயற்கையாக தாமதப்படுத்தப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் SS. பழனிமாணிக்கம் தலையீடு காரணமாக தாலுக்கா அறிவிப்பு தாமதமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் பழனிமாணிக்கம் தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சூழலில், தமிழக அரசின் முக்கிய அமைச்சராக இருக்கும் KKSSR ராமச்சந்திரன் அதிராம்பட்டினம் தாலுக்கா விவகாரத்தை முன்னுரிமையுடன் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத் தொடரில் தாலுக்கா அறிவிப்பு வெளியாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிராம்பட்டினம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள தாலுக்கா அறிவிப்பை தமிழக முதலமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிராம்பட்டினம் வளர்ச்சிக்காக இந்த அறிவிப்பு அவசியம் என்பதால், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.








