பட்டுக்கோட்டை | ஏப்ரல் 07, 2026
திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கு எதிராக, கட்சியின் மூத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் நகராட்சியின் 11-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் ஜெகபர் நாச்சியா. இவரது கணவர் முகம்மது சரிஃப், திமுகவின் மறைந்த மூத்த தலைவர் NKS ஜெக்கரியாவின் பேரன் ஆவார். தீவிரமான திமுக பின்னணி கொண்ட முகம்மது சரிஃப், தற்போது பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கா. அண்ணாத்துரையை எதிர்த்துத் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
இது அண்ணாத்துரைக்குக் கிடைக்க வேண்டிய சிறுபான்மையின வாக்குகளைப் பிரிக்கும் சதி என உள்ளூர் திமுகவினரின் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
மோதலின் பின்னணி என்ன?
நிர்வாக வசதிக்காக அதிராம்பட்டினம் திமுக கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே,
வேட்பாளர் கா. அண்ணாத்துரைக்கும், அதிரை கிழக்கு நகர நிர்வாகிகளுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.
அண்ணாத்துரை மீது அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது எனத் தலைமைக்குப் பல்வேறு புகார்களை அனுப்பியிருந்தனர்.
ஆனால், கட்சித் தலைமை மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு வழங்கியதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘உள்ளடி’ வேலைகளாக முகம்மது சரிஃப் களமிறக்கப்பட்டுள்ளதாகப் பேசப்படுகிறது.
தத்தளிக்கும் உடன்பிறப்புகள்
இந்தச் சிக்கலில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
வழக்கமாக, அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் மீது தலைமை உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
சரிஃபின் வுவகாரத்தில் திமுக என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளன.
அண்ணாத்துரைக்கு எதிராக களமிறக்கப்பட்ட கருப்பாடுகளை களையெடுக்குமா திமுக?
மாவட்ட செயலாளர் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா அல்லது சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தேர்தலுக்கு முன் இந்தப் பிளவைச் சரிசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.








