அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை ஒரு நாள் ஒதுக்கிடுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், தினசரி மதபயிற்சிக்காகச் செயல்பட்டு வரும் அந்த மதரசா வளாகத்தை முகாமுக்காக மாற்றுவது சாத்தியமற்றது என்று நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த நிலையைத் தொடர்ந்து, மதரசா கட்டிடத்திற்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், “காலையில் நோட்டீஸ் அனுப்பப்படும்” என்றும், முகாமுக்குக் கட்டாயம் அனுமதி தர வேண்டும் என ஆய்வாளர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மத வழிபாட்டு உரிமையில் தலையிடும் வகையில் வருவாய் ஆய்வாளர் நடந்துகொண்டுள்ளார் எனக் கூறிய பொதுமக்கள், கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வழக்கமாக இந்த முகாம் செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றுவந்தது. ஆனால், வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அந்த இடம் ஏற்கனவே வேறு நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்யப்பட்டதால், மாற்று இடமாக மதரசா வளாகம் கோரப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் காட்டுத்தீ போல் பரவி, நகரின் ஜமாஅத் நிர்வாகிகளும் பொதுமக்களும் கடும் கண்டனம் வெளியிட்டு வருகிறார்கள்.
அதிகாரம் சார்ந்தோரின் இந்த நடவடிக்கை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 200 இலக்கை நோக்கி நகரும் ஆளும் திராவிட மாடல் அரசுக்கு பெரிய சவாலாக மாறும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதில் தொடர்ந்தும் அரசின் நிலைப்பாடு என்ன என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.