அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு போதையிலிருந்து விலகி வாழ உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்வில் மருத்துவர் ஹாஜா மொய்தீன் பேசுகையில், “போதையினால் உடல் நலம் சீர்கேடும், மன நலம் சிதையும், குடும்பம் சிதறும், சமூகம் சீரழியும். ஒரு சிறிய சுகத்துக்காக தொடங்கப்படும் இந்த பழக்கம் வாழ்நாளையே கரைக்கும் தீக்காயாக மாறுகிறது. இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் குடும்பங்களும் தேசமும் காப்பாற்றப்பட முடியும்” எனக் கூறினார்.
ஜஃபருல்லா மன்பயி தனது உரையில், “இஸ்லாம் போதைப்பொருளை தீமையின் தாய் எனக் கூறுகிறது. சமூகத்தில் பெரும்பாலான குற்றங்களும் குடும்ப சிதைவுகளும் இந்த போதையின் விளைவே. மதம், ஒழுக்கம், மனிதத்துவம் ஆகிய மூன்றையும் அழிக்கும் இந்த நஞ்சிலிருந்து இளைஞர்கள் விலகி வாழ வேண்டும். விழிப்புணர்வே உயிர்காக்கும் கவசம்” என வலியுறுத்தினார்.
இந்த விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், உலமாக்கள், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், போதை விழிப்புணர்வு பேச்சாளர் சேக் உமர், ஆஃப்ரின் நெய்னா முகம்மது மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு போதை ஒழிப்புக்கான உறுதிமொழி எடுத்தனர்.














