தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், கட்சியின் பிரைமரி, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், சில சினிமா நடிகர்கள் திரையுலகிலிருந்து நேரடியாக முதலமைச்சர் பதவியை நோக்கி அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் பதவியை மையப்படுத்தி செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
இத்தகையவர்கள் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் அரங்கில் காணாமல் போவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களைப் போல இல்லாமல் மிகச் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.







