அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வந்த ரயில்வே முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டுள்ளதால், உள்ளூர் மக்களும் ரயில் பயண ஆர்வலர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இந்த மையம் ரயில் நிறுத்தத்திற்கு முன்பே இயங்கி வந்த நிலையில், பான்பன் விரைவு ரயில் அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் பெற்ற பிறகு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, முன்பதிவு மையத்தின் வருவாயும் கணிசமாக உயர்ந்து வந்தது.
இந்நிலையில் மையம் மூடப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மையத்தில் பணியாற்றிய அதிகாரி வருவாயை குறைத்து கணக்கில் காட்டியதாகவும், அதன் காரணமாக மையம் மூடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே முக்கியமாக பயன்படுத்தி வரும் நிலையில், முன்பதிவு மையம் மூடப்பட்டிருப்பது அவர்களின் பயண உரிமையை பாதிக்கும் செயல் என ரயில் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு முன்பதிவு மையத்தை உடனடியாக மீண்டும் திறக்க வேண்டும் என்றும், ஏற்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








