அதிராம்பட்டினத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு உடனே விரைந்து சென்று உயிர்களை காப்பாற்றி வருகிறது.
அந்த வகையில் இன்று தஞ்சாவூர் சென்று ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அதிரைக்கு திரும்பியுள்ளது.
அப்போது மாளியக்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஃப்ரிடியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெய்கணேஷ், தாக்குதல் நடத்தியவரை கைது செய்தார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் சுரேஷ் என்றும் பள்ளிக்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய மற்றொருவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிரை தமுமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.