புத்தகம் தொடர்பான தேடலில், கணக்கற்ற நல்ல ஆத்மாக்களோடு தொடர்பில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம்தான்.
அப்படியான ஒரு தொடர்புதான் பெரியவர் அதிரை அஹ்மத் அவர்களுடனான தொடர்பு.
அவர்களின் எழுத்துலகில், கனவு நூலான ‘நபி வரலாறு’ நூலை, அவர்கள் விரும்பிய வகையில், தேவைப்படும் இடங்களில் அரபி எழுத்துக்களோடு வெளிக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டோம்.
இலக்கியச்சோலை பதிப்பகம், அந்த நூலை வெளிக் கொண்டு வர அதிரையார் சம்மதம் தெரிவித்தவுடன்,
நூல் உருவாக்கப் பணி தொடர்பாக முதல் கட்டமாக பேச, மன்னடியில் அவர்களைச் சந்தித்தேன்.
வழக்கம் போல, புத்தக ஆக்கம் மற்றும் நேர்த்தி பற்றி, ரொம்ப கறாராக பேசினேன். என் தந்தையை விடவும் வயது முதிர்ந்த அவரிடம், சற்றும் விட்டுக் கொடுக்காமல், பதிப்புத்துறை நுட்பங்கள் சார்ந்து நூலாசிரியரின் விருப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் ‘திமிராகவே’ பேசினேன் என்றும் சொல்லலாம்.
ஆனால், அதனையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல், குழந்தையைப் போல, ‘கனவு நூலை’ கச்சிதமாக கொண்டு வருவதிலேயே கவனமாக இருந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.
அவர்களின் விருப்பம் போல நூல் மெச்சக்கத்தக்க வகையில் வெளி வந்தது. அதிரையார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அப்படி தொடங்கிய நட்பில் சில போது தொலைபேசியிலும், அதிரையில் ஒரு நாள் நேரிலும் சந்தித்தது மிக்க மகிழ்வான தருணம். ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ நூல் வெளியீட்டில், அதிரையில் நானும் பங்கேற்றேன் என்பது எனக்குப் பெருமை. (எழுத தொடங்குபவர்கள், கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டும்)
அண்மையில், அரபுத் தமிழ் தொடர்பான ஆய்வொன்றிற்காக அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனேன்.
இனி சந்திக்கவோ, உரையாடவோ வாய்ப்பில்லை. பேச்சு மிகைத்துள்ள இந்தக் காலத்தில், வரலாற்றையும் வாழ்வியலையும் எழுத்தில் பதிய வைக்கும் உன்னதமானவர்களின் மறைவுகள் சமூகத்துக்கு கைசேதமே…
நேற்றுதான் நிஷா மன்சூர் அவர்களின் பதிவொன்றில், அதிரையாரை நினைவுபடுத்தினேன்.
அல்லாஹ் அவர்களின் பணிகளைப் பொருந்திக் கொள்ளட்டும்.
– குத்தூப்தீன், நியூஸ்7தமிழ் டி.வி மூத்த ஆசிரியர்
