சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளாகி கால்வாயின் குறுக்கே நிற்பதால் உலக வர்த்தக தடை உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடியது சூயஸ் கால்வாய். தினசரி உலக வர்த்தகத்தில் 12% இதன்வழியாகத்தான் நடந்துவருகிறது. இந்த கால்வாயில் நாளொன்றுக்கு 50 கப்பல்கள் வரை பயணிக்கின்றன. இந்த கால்வாய் இல்லையென்றால் ஆப்பிரிக்காவையே ஒரு சுற்று சுற்றித்தான் கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். அத்தகைய பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதால் இக்கால்வாய், வர்த்தக உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி காலை 7.40 மணியளவில், தைவான் நாட்டைச்சேர்ந்த எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக்கப்பல் (220,000 மெட்ரிக் டன் எடை, 1,312 அடி நீளம்) இந்த கால்வாயைக் கடந்துகொண்டிருந்தபோது பலமான மணல் புயல் வீசியிருக்கிறது.
மணல் புயலின் கடுமையால் கப்பலின் கேப்டனுக்கு திசையைக் கவனிக்கவே முடியாமல் போயிருக்கிறது. எனவே கப்பல் நேராகச் செல்லாமல் திசை திரும்ப, 900 அடி அகலமுள்ள அந்த கால்வாயின் கிழக்கு, மேற்குக் கரைகளை முட்டிக்கொண்டு நின்றது. மேலும் கப்பலின் அடிப்பாகம் மணலுக்குள் நன்றாகச் சிக்கிக்கொண்டது.
விபத்துக்குள்ளான இந்த கப்பலை மீட்க இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. மேலும் கப்பலை மணலுக்குள்ளிருந்து மீட்க வேண்டுமென்றால், அதன் எடையைக் குறைத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டாலும், எது சாத்தியமான முறை என்று ஆய்வுசெய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்த நிபுணர்கள் அங்கே விரைந்துள்ளனர்.
கப்பலிலிருந்து எரிபொருள் எடையைக் குறைப்பது, கன்டெய்னர்களை வெளியேற்றுவதன் மூலம் கப்பலின் எடையைக் குறைக்கும் யோசனையில் இருக்கிறார்கள். அப்படி எடையைக் குறைப்பதற்கே ஒரு வார காலமாகலாமென்று தெரிகிறது. அதன்பின்னர்தான் கப்பலை அசைக்கவே முடியும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்நிலையில் சூயஸ் கால்வாயின் இருபுறமும் சவுதி, ரஷ்யா, ஓமன் மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த எண்ணெய்ப் போக்குவரத்துக் கப்பல்கள், அண்ணன் எப்போ போவான், பாதை எப்போ கிடைக்குமென்று அணிவகுத்து நிற்கின்றன. இதன்காரணமாக மிகப்பெரிய டிராஃபிக் ஜாம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு நேரம் செல்லச் செல்ல உலகளாவிய வர்த்தகத்துக்கு அடிவிழத் தொடங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விலைவாசி உயர வாய்ப்பும் உள்ளது . ஒரு போர்ச்சூழலில் எப்படி உலக வர்த்தகம் பாதிக்கப்படுமோ, அத்தகைய நிலையை அந்த மணல் புயல் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு அந்த கப்பல் நிறுவனம், சிரமத்துக்கு வருந்துகிறோம் என்று தனியார் தொலைக்காட்சி போல் தனது வருத்தத்தை மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த களேபரம் ஒரு பக்கம் இருக்க, மீம்ஸ் க்ரியேட்டர்களோ ” ஏற்கனவே பெட்ரோல் ,டீசல் விலை அதிகம் ; போதாத குறைக்கு இந்த சம்பவத்தால் இன்னும் விலை அதிகமாகும்” என அவர்களது மீம்ஸ் கருத்தையும் முன் வைத்து வருகின்றனர்.







