Home » ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம படுதோல்வி – பல இடங்களில் டெபாசிட் இழப்பு!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம படுதோல்வி – பல இடங்களில் டெபாசிட் இழப்பு!

0 comment

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்று காலையில் இருந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் அதிக அளவில் இடங்களை கைப்பற்றி உள்ளன.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மொத்தம் 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் தேர்தல் நடைபெற்றது. திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 138 இடங்களில் திமுக உறுதியாக மாவட்ட கவுன்சிலர் பதவியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.

மாவட்ட கவுன்சிலருக்கான பதவிகளை திமுக, திமுக கூட்டணி கட்சிகளை, அதிமுக (2 மாவட்ட கவுன்சிலர்) தவிர வேறு எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதேபோல் 9 மாவட்டங்களில் 1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 1009 இடங்களில் திமுகவும், 215 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 47 இடங்களில் பாமகவும் முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலில் பாமக, நாம் தமிழர், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு மாநில கவுன்சிலர் பதவியை கூட வெற்றிபெறவில்லை. அதேபோல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்துள்ளனர். ஒரு ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் கூட மநீம சார்பாக வெற்றிபெறவில்லை. எந்த ஒன்றியத்திலும் மக்கள் நீதி மய்யம் வெற்றியை பெறவில்லை.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய சில மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழக்கும் அளவிற்கு மோசமாக தோல்வி அடைந்துள்ளனர். கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மநீம கணிசமான வாக்குகளை பெற்றது. தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்றாலும் மநீம கொஞ்சம் நம்பிக்கை அளிக்க கூடிய கட்சியாக இருந்தது.

ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பின் கமலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மநீம உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து வெளியேறினார்கள். டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இணைந்தனர். இதனால் மநீம போதிய தலைவர்கள் இன்றி 99வது நாள் பிக்பாஸ் வீடு போல் ஆட்கள் இன்றி காணப்பட்டது.

ஆனாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு அந்த கட்சி பெரிய அளவில் இடங்கள் எதையும் கைப்பற்றவில்லை. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்வி, மநீமவில் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தை அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு உணர்த்தி உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter