தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் நலவாரியம் மூலமாக சிறுதொழில் நிதி உதவி, தையல் இயந்திரம், கிரைண்டர் மற்றும் விலையில்லா மிதிவண்டி ஆகியவைகளை பயனாளிகளுக்கு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராஜ்யசபா உறுப்பினர் கல்யாணசுந்தரம், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.












