Home » தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்… யார் இவர் ?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்… யார் இவர் ?

0 comment

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல் துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) பணி ஓய்வு பெறுகிறார். ஏற்கெனவே, ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தற்போது அவர் பணி நிறைவு செய்கிறார். இதையடுத்து, புதிதாக சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், புதிய டிஜிபிக்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய டிஜிபிக்கான ரேஸில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி (ஊர்க்காவல் படை தலைவர்), சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்ளிட்ட 10 பேர் இருந்தனர்.

இவர்களில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு அரசு தேர்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இவர்களில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினால் டிக் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு காவல்துறையின் 31வது தலைவராக, சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கர் ஜிவால் வகித்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் பதவி காலியாகும் நிலையில், சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சங்கர் ஜிவால் பற்றி:

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் குமாவுனி மொழியில் புலமை பெற்றவர்.

என்ஜினீயரிங் படித்து முடித்ததும் செய்ல், பெல் நிறுவனங்களில் சிறிது காலம் பொறியாளராக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். சேலம், மதுரை எஸ்.பி, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், திருச்சி காவல் ஆணையர், உளவுப் பிரிவு டிஐஜி, ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ஆகிய முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.

சிறந்த பணிக்காக 2 முறை குடியரசுத் தலைவரின் பதக்கம் பெற்றவர். சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் கடந்த 2021 மே மாதம் முதல் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது இவர் தமிழ்நாடு காவல்துறையின் மிக உயரிய பதவியான டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter