மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து வருகின்றனர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க மற்றொரு முனையில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்து அந்த சின்னத்தை வேறு கட்சிக்கு வழங்கியது. இதனால் கொதித்தெழுந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் நேரத்தில் வேறு சின்னத்தில் போட்டியிட செய்வது நியாயமில்லை என்ற கோணத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தார்.நாம் தமிழர் கட்சியின் கடந்த நான்கு தேர்தல்களில் பயன்படுத்திய சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை தற்போதைய தேர்தலில் பயன்படுத்த முடியாதது போல் வேறு கட்சிக்கு வழங்கி நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பை தடுக்கும் வண்ணம் செய்துள்ளனர் என பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இன்றையத்தினம் நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் மூலம் பெற்று சின்னத்தை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் ஒலிவாங்கி(மைக்) சின்னத்தில் வாக்களியுங்கள் என அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
