மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வி மேம்பாடு, சுகாதார சேவைகள், உடல்கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, பண்பலை ஊடக சேவைகள், ஏழைகள் மற்றும் நலிவுற்றோரின் மறுவாழ்வு, மார்க்க கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அக்கறையுடன் செயல்பட்டார். குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் எடுத்த முயற்சிகள் அனைவராலும் நினைவுகூரத்தக்கவை என்றும் அவர் கூறினார்.
மேலும், கல்வியும் ஒழுக்கமும் கொண்ட சமுதாயம் உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்குடன் பல கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியதன் மூலம், தலைமுறைகள் தாண்டியும் பயனளிக்கும் பணிகளை மறைந்த தாஜுதீன் அவர்கள் செய்துள்ளார் என அப்துல் காதர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் நகர தலைவர் வழக்கறிஞர் இசட். முகம்மது தம்பி, மறைந்த தாஜுதீன் காக்காவின் சமூக நிலைப்பாடு எப்போதும் பொதுநலன் சார்ந்ததாக இருந்தது என்றும், இளைய சமூகம் சிந்தனையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட உடல் ஆரோக்கியம் அடிப்படைத் தேவையாகும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.
அதற்காகவே நடைபயிற்சி (வாக்வே) போன்ற நல்ல பழக்கவழக்கங்களையும் ஆரோக்கிய சிந்தனைகளையும் அவர் ஊக்குவித்து வந்தார் எனவும் அவர் கூறினார்.
மேலும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.ஹச். அஸ்லம் பேசுகையில், மறைந்த தாஜுதீன் அவர்கள் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து அடிக்கடி வலியுறுத்தி, குறிப்பாக “குளங்களை நிரப்ப முயற்சி செய்யுங்கள்” என அவ்வப்போது கூறி வந்ததை நினைவுகூரினார்.
இவ்வகையான பாராட்டு மற்றும் நினைவு கூட்டங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே நடத்தப்பட்டிருந்தால், அது அவர்களுக்கும் பெரும் உத்வேகமாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் ஊருக்காக உழைத்து, சமூக வளர்ச்சிக்காக தன்னலமின்றி பாடுபட்டவர்களை அடையாளம் கண்டு போற்றும் பணிகள் கட்டாயம் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சுஐப் ஆலிம், மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று எனவும், மறைந்த ஹாஜி தாஜுதீன் அவர்களை நாம் போற்றுவதற்கான காரணம் அவர்களின் வாழ்நாள் சேவைகளே எனவும் கூறினார்.
குறிப்பாக கல்விக்காகவும், மார்க்க ரீதியிலான உதவிகளுக்காகவும் அவர் செய்த பணிகள், ‘சதகத்துல் ஜாரியா’ எனப்படும் நிரந்தர தர்மமாக இருந்து, மரணித்த பிறகும் அந்த நன்மைகள் அவருக்கு சென்று கொண்டே இருக்கும் என அவர் விளக்கினார்.
அதுபோன்ற நிரந்தர நன்மை தரும் பணிகளை நாமும் செய்ய முன்வர வேண்டும்; அதுவே மறைந்த தாஜுதீன் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என சுஐப் ஆலிம் தனது உரையில் வலியுறுத்தினார்.
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் ஒரு தொழிலதிபராக மட்டுமல்லாமல், சமூக சிந்தனையாளர், கல்வி நேசர் மற்றும் மனிதநேய பண்புகளைக் கொண்ட தலைவராகவும் விளங்கினார்.
அவரது மறைவு சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்; அவர் விட்டுச் சென்ற சேவை பாதையை தொடர்ந்து செயல்படுவதே அவருக்கு செலுத்தும் பிரார்த்தனையாக இருக்கும் என கூட்டத்தில் பேசியோர் ஒருமனதாக தெரிவித்தனர்.








