தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்’ கீழ், அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வார்டு இளைஞர்களுக்கு கிரிக்கெட் மட்டை, கால்பந்து மற்றும் கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, பெரும்பொருட்செலவில் இந்த உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. வாங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பாதுகாப்பான அறையில் சேமித்து வைக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம், அவற்றை அலட்சியமாக தண்ணீர் படும் இடத்தில் போட்டு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மரத்தால் செய்யப்பட்ட கேரம் போர்டுகள் நீரில் நனைந்து, பலகைகள் ஊறிப்போய் முற்றிலும் சிதைந்து போயின.
இந்தச் சூழலில், சேதமடைந்த அந்த கேரம் போர்டுகளைச் சரிசெய்யாமல் அப்படியே வார்டு இளைஞர்களுக்கு கடந்த நகராட்சி நிர்வாகம் விநியோகம் செய்துள்ளது. விளையாடுவதற்காக ஆர்வத்துடன் உபகரணங்கள் வாங்க வந்த இளைஞர்கள், கையில் கிடைத்த கேரம் போர்டுகள் உப்பிப் போய், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
“மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் இப்படி அதிகாரிகளின் மெத்தனத்தால் குப்பையாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. விளையாடத் தகுதியற்ற பொருட்களை வழங்கி எங்களை ஏமாற்றுவது முறையல்ல” என அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.










