தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாநிலத்தின் பல இடங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாகவும், சில இடங்களில் வெப்ப அலையும் வீசியது.
இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பதிவாகி வருகிறது.
அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 16செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் அதிராம்பட்டினம் 10செமீ, மதுக்கூர், மணமேல்குடியில் தலா 11செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.