தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி பாப்பாநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் மருந்து நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகன்கள் ஸ்ரீஹரி, கிஷோர்(வயது11). இவர்களில் கிஷோர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த 23-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் மைதானத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.
நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பி வந்தநிலையில் கிஷோர் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
மேலும் கிஷோருடன் விளையாடிய சிறுவர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ்வேந்தன் மகன் அரவிந்தை(22) சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர். சில மாதங்கள் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்துள்ளார். தற்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கிஷோரை கொன்று புதைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போலீஸ் விசாரணையில் கூறியதாவது:-
கடந்த 23-ந் தேதி மாலை நண்பர்களுடன் கிஷோர் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நான் அந்த பகுதியில் உள்ள சுவரின் ஓரம் நின்று சிகரெட் குடித்து கொண்டிருந்தேன். கண்ணாமூச்சி விளையாடிய கிஷோர் மறைந்து கொள்வதற்காக சுவர் அருகே வந்தான். இதை பார்த்த நான் இங்கெல்லாம் வரக்கூடாது. வேறு இடத்திற்கு போ என்று விரட்டினேன். அதற்கு நீ வேறு இடத்திற்கு சென்று சிகரெட் பிடி என்று மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசினான். ஒரு சிறுவன் எதிர்த்து பேசுகிறானே என்று ஆத்திரத்தில் மிரட்டுவதற்காக அவனது கழுத்தை பிடித்து நெரித்தேன். அவனது வாயில் இருந்து நுரை வந்ததால் அதிர்ச்சி அடைந்தேன். சிறிதுநேரத்தில் அங்கேயே அவன் மயங்கி விழுந்து இறந்துவிட்டான். இது வெளியில் தெரிந்தால் கொலை வழக்கில் மாட்டி கொள்வோம் என்று கருதி இரவு நேரமானதும் கிஷோர் உடலை தூக்கிக் கொண்டு எனது வீட்டின் அருகில் உள்ள காலிமனைக்கு சென்றேன். காலிமனையில் வளர்ந்திருந்த பனைமரத்தின் அடியில் குழிதோண்டி கிஷோர் உடலை புதைத்துவிட்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
நேற்று காலை போலீசார் கிஷோர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அரவிந்தை அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கு கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தை அரவிந்த் அடையாளம் காட்டினார்.அவர் காட்டிய அடையாளத்தை வைத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், ரெத்தினவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், தாசில்தார் தங்கபிரபாகரன், துணை தாசில்தார் பாலசுப்பிர மணியன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் மாணவன் கிஷோரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
உடல் புதைக்கப்பட்டு 3 நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியது. பின்னர் உடலை சாக்குப்பையில் வைத்து கட்டி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் மாணவனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அரவிந்தை கைது செய்தனர்.
சிறுவனை கொன்ற இளைஞன் குடி போதையில் இருந்ததும் சிறுவன் இளைஞனின் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியதால் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.