தஞ்சை மாவட்டத்தில் திமுக இரு கோஷ்டிகளாக பிரிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தேர்தல் வரை இந்த கோஷ்டி மோதல் தொடர்ந்து கொண்டு உள்ளது.
இதை திமுக தலைவர் ஸ்டாலினும் அறிந்துதான் வைத்துள்ளார். எனவேதான், வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தின்போதே, அனைவரும், இணைந்து வேலை செய்ய வேண்டும். வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை இருக்கும் என்று எச்சரித்தார்.
ஆனால், மோதல் முடிந்தபாடில்லை. இந்த தேர்தலிலும் கோஷ்டி பூசல் தஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடி வருகிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். அங்கு இருப்பது இரு பெரும் குரூப். ஒன்று, கோசி மணி கோஷ்டி என்றால் மற்றொன்று, பழனிமாணிக்கம் கோஷ்டி. இந்த கோஷ்டி பூசலால்தான், திமுகவிற்கு பாரம்பரியாக கிடைத்து வந்த தஞ்சை சட்டசபை தொகுதியை அக்கட்சி இழந்தது.
ஆனால் கோஷ்டி பூசல் ஓயாததால், அடுத்த தேர்தலிலும், தஞ்சை தொகுதி பறிபோனது. அப்போது களத்தில் டி.ஆர்.பாலு கோஷ்டியும் கச்சைகட்டியது. இந்த நிலையில்தான் மீண்டும் தஞ்சை தொகுதிக்கு இப்போது இடைத் தேர்தல் வந்துவிட்டது. 3வது முறை மோதலிலாவது தஞ்சையை திமுக கைப்பற்றுமா என்றால், இப்போதும் கோஷ்டி பூசல்.
தஞ்சாவூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் நீலமேகம் கோஷ்டி பூசலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் பழனிமாணிக்கம் இன்னும் பல கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க போகவில்லையாம். போனாலும் கூட அங்கெல்லாம், திமுகவின் பிற கோஷ்டி நிர்வாகிகளுக்கு தகவலும் சொல்லப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோஷ்டி பூசல் கை கலப்பு, மண்டை உடைப்பு வரை நீண்டுவிட்டது. பின்னையூர் கிராமத்தில் கிளைச் செயலாளர் நாகராஜன் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை என்று பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி கேள்வி எழுப்ப, அதற்கு பதிலுக்கு இவர்கள் கத்த, மோதல் முற்றி, நாகராஜன் மண்டை உடைந்தது.
பழனிமாணிக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தில், கோஷ்டி பூசல் இருப்பதை கோட்டிட்டு காட்டி வாக்கு கேட்பதும், திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகமான வேட்பாளர் என்ற ஒரே தகுதி போதும், தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பழனிமாணிக்கம் கோஷ்டி நினைக்கிறது. ஆனால், தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், திமுக தலைமை இதில் தலையிட்டு, நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று திமுகவினர் எதிர்பார்க்கிறார்கள்.