தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தை பொறுத்த வரை இருக்கின்ற 6 இடங்களில் திமுகவுக்கு 3 இடங்களும், அதிமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தல் ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் இரண்டு இடங்களில் திமுக வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்று விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆகையால் ராஜ்யசபா இடத்திலாவது திமுக ஒரு இஸ்லாமியரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுப்பப்பட்டது. ஆனால் அதனை திமுக கண்டுகொள்ளவில்லை என்பது வேட்பாளர் அறிவிப்பின் மூலம் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது தமிழக இஸ்லாமியர்களின் வாக்குகளை அப்படியே மொத்தமாக அள்ளிய திமுக, இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பாளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது தமிழக இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்திகொள்ள பார்க்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.