தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
வழக்கம்போல இப்பகுதி மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வலைகள், தண்ணீர் கேன், உணவுகளுடன் மீன்பிடித் துறைமுகம் சென்றனர். அப்போது மீனவர்கள் தாங்கள் படகுகளை நிறுத்தி நங்கூரமிட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது.. வாய்க்கால் தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்த படகுகள் அனைத்தும் தண்ணீரின்றி தரைதட்டி நின்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மீனவர்கள் கடலை பார்த்தபோது கண்ணுக்கெட்டிய வரை கடலில் தண்ணீர் தெரியவில்லை. இது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் உள்வாங்கி சேரும் சகதியுமாக இருந்தது. திடீரென கடல் உள்வாங்கியது எதனால் என்ற குழப்பம் மீனவர்கள் மத்தியில நீடிக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக தூரம் உள்வாங்கியிருப்பது ஏன் என்ற குழப்பம் மீனவர்கள் இடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.