அதிரையில் நேற்று புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மழையைத் தொடர்ந்து 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் மின்வாரியம் தரப்பில், துவரங்குறிச்சி அருகில் ஏற்பட்ட பழுதே மின்தடைக்கு காரணம் என கூறப்பட்டது.
பின்னர் மழை நின்றும் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படவில்லை. விடிய விடிய மின்சாரம் இன்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு குழந்தைகளும் மின்சாரம் இன்றி தூக்கத்தை தொலைத்தனர்.
காலை ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 7.30 மணிக்குள் மின்சாரம் வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இறுதியாக சுமார் 7.35 மணியளவில் மின்விநியோகம் செய்யப்பட்டது. இதனால் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.