மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் 9, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசுகையில் மகாராஷ்டிரம், ஹரியானாவில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை அக். 24ம் தேதி நடைபெறுகிறது.
இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் தேதி – அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை – அக்டோபர் 24
வேட்புமனு தாக்கல் – செப்டம்பர் 23
வேட்புமனு தாக்கல் முடிவு – செப்டம்பர் 30
வேட்புமனு பரிசீலனை – அக்டோபர் 1
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – அக்டோபர் 3
என்றார் சுனில் அரோரா.
கடந்த நாடாளுமன்ற தொகுதி தேர்தலின் போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், எம்பியாக தேர்வு செய்யப்பட்டதாலும், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ-வாக இருந்த ராதாமணி இறந்துவிட்டதாலும், தற்போது அந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.