Home » ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த புதுக்கோட்டை எஸ்பி-யை மாற்றக்கோரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய பாஜகவினர் !

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த புதுக்கோட்டை எஸ்பி-யை மாற்றக்கோரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய பாஜகவினர் !

0 comment

புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு அனுமதி மறுத்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ். இதையடுத்து அவரிடம் பாஜக இளைஞரணி நிர்வாக உறுப்பினரும், ராமேஸ்வரம் மண்டல பாஜக இளைஞரணி பொறுப்பாளருமான டி.எஸ்.பாண்டியராஜ் பேசிப்பார்த்துள்ளார். ஆனால் எஸ்.பி.செல்வராஜ் அனுமதி இல்லை என்பதில் கறாராக இருந்துள்ளார்.

இதனால் எஸ்.பி.செல்வராஜ் மீது கோபம் கொண்ட பாண்டியராஜ், அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், எஸ்.பி. செல்வராஜ் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அரசியல் காரணங்களுக்காகவும், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காகவும் அவர் இது போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த முறையும் இதேபோல் தான் அவர் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி தர மறுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜை உடனடியாக பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக பாஜக நிர்வாகி பாண்டியராஜ் அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் மீது புகார் தெரிவித்து கடிதம் எழுதி, அதை பொதுவெளியில் வெளியிடுவதன் மூலம் அதிகாரிகளை மிரட்டும் போக்கு உருவாகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் என்பது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி. இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் என இதுவரை எந்த பாகுபாடும் இல்லாமல் அமைதியாக உள்ள ஒரு இடத்தில், ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்தி அது அமைதிக்கு குந்தகம் விளைவித்துவிடுமோ என்ற எச்சரிக்கை உணர்வுடன் காவல்துறை அனுமதி மறுத்ததற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும், இந்த இலுப்பூர் தொகுதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியான விராலிமலை எல்லைக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter