Home » 2 வயது சிறுவனை பத்திரமாக மீட்க தொடரும் போராட்டம்…!

2 வயது சிறுவனை பத்திரமாக மீட்க தொடரும் போராட்டம்…!

0 comment

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் நிபுணர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மொத்த தமிழகமும், இந்த குழந்தை நல்ல முறையில் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறது. #SaveSujith என டுவிட்டரில் தமிழ் நெட்டிசன்கள் தேசிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் சமீபமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் குறைந்து இருந்தது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் இன்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் இன்று மாலை 6 மணியளவில் திடீரென விழுந்துவிட்டார். இந்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினரும், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சுமார் 26 அடி ஆழம் கொண்டதாக அந்த ஆள்துளை கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. உள்ளே ஆக்சிஜனை ட்யூப் மூலம் அனுப்பி அந்த குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையை தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மருத்துவ மீட்பு குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிணற்றின், பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியைத் தோண்டி அதன் வழியாகவும் குழந்தை எடுப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

குழந்தை பயப்படாமல் இருப்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சும் பணி நடைபெறுகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் கேமராவை அனுப்பி தீயணைப்புத்துறையினர் சோதித்துப் பார்த்தபோது, உட்கார்ந்த நிலையில் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த மணிகண்டனின் இயந்திரத்தை கொண்டு தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தையின் உடலில் அசைவு இருக்கிறது, எனவே குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்றும் தீயணைப்பு துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது இருள் சூழத் தொடங்கி விட்டதால் கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடியாகச் சென்று மீட்பு குழுவினருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருக்கிறார். மொத்த அரசு இயந்திரமும் களமிறங்கி சிறுவனை மீட்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும், பிரார்த்தனையாகவும் உள்ளது!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter