தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக திருவனந்தபுரம் சென்ற அவர், சென்னையில் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கும் நன்றி கூறினார். இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “பார்ப்பனர் அல்லாதவர்களை அர்ச்சகராக்கிய கேரள அரசின் நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அறனாக கேரள அரசு திகழ்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், கேரள அரசு மீது அவதூறுகளை கூறும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.