சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் தங்களுடைய குடும்ப பெண்களின் புகை படங்களை வெளியிடுவது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று டெல்லி ‘தாருல் உலுாம் தியோபந்த் என்ற முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தினமலர் எனும் பத்திரிக்கை 20-10-17 அன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது
வழக்கம் போல் இதை இஸ்லாமிய பெண் அடிமைத்தனம் என்று பலர்கள் விமர்சித்தாலும் இப்படி ஒரு கட்டுப்பாடு நன்மையானதா அல்லது தீமையானதா என்று அறிந்து கொள்வது நம் சமூகத்தின் கடமையாக உள்ளது
சமூக வளைதளங்களில் இஸ்லாமிய பெண்கள் இரு வகையினர்களாக உள்ளனர்
1 – எவ்வகையிலும் தன்னை பெண் என்று அந்நியர்கள் அறிந்து கொள்ள கூடாது என்ற நிலையில் தன் கணவனின் புகைப்படத்தையோ அல்லது இயற்கை மற்றும் இஸ்லாமிய ஸ்டில்களை மட்டும் தங்கள் புரபைல் படமாக போடும் பெண்கள் ஒரு சாரார் இவ்வகை பெண்களை எவ்வகையிலும் குறை கூற வாய்ப்பு இல்லை
ஆனால் இதில் இரண்டாம் வகை பெண்கள் சற்று வித்தியாசம் ஆனவர்கள்
அந்நியர்கள் நிரம்பி உள்ளனர் என்பதை தெளிவாக தெரிந்து இருந்தும் சமூகவளைதளமான முகநூல் மற்றும் வாட்சப் குரூப்களில் பல வகைகளில் தங்களை பெண்கள் என்று பிற ஆடவர்கள் அறிந்து கொள்ள பல வழிமுறைகளை சூட்சமமாக வெளிப்படுத்தி வருகின்றனர்
1 – தங்களின் புகைப்படங்களை நேரடியாகவே பிறர்கள் பார்க்கும் விதமாக பதிவாக்குவது
2 – பிற தளங்களில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்ட பெண் வடிவ கார்ட்டூன் படங்களை பதிவாக்குவது
3 – தனக்கு நேரடி தொடர்பே இல்லாத அந்நிய பெண்களின் புகைப்படங்களை தங்களது புகைப்படம் போன்று சித்தரித்து பதிவாக்குவது
4 – இவரின் மகள் ( இப்னத் பாத்திமா ) என்றோ அல்லது இவரின் தாய் ( உம்மு பாத்திமா) என்று இயற்கை படங்களை போட்டு விட்டு நான் பெண் தான் என்பதை மறைமுகமாக பெயர் வடிவத்தில் அந்நியர்களுக்கு அறிய வைப்பது
5 – மருதாணி பூசிய கைகளின் புகைப்படம் அல்லது பெண்ணிண் கண்கள் படம் அல்லது குழந்தையின் புகைப்படம் அல்லது பெண்கள் மாத்திரம் பயன்படுத்தும் ரோஜா போன்ற பொருள்களின் புகைப்படங்கள் பதிவாக்குவது
இதில் சில முறைகளை தர்க்க ரீதியில் நியாயப்படுத்த முடியும் என்றாலும் அதற்கான அவசியம் என்ன என்ற கேள்விக்கு இந்த பெண்களால் பொருத்தமான பதில்களை மார்க்க ரீதியிலும் பகுத்தறிவு ரீதியிலும் விளக்க முடியாது
நல்ல பல கருத்துக்களை மார்க்க விபரங்களை அறிந்து கொள்ளவே சமூக வளைதளங்களில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம் என்று பெண்கள் வாதித்தால் அந்த வாதத்திற்க்கு சமூக வளைத்தில் இந்த அறிமுகங்கள் அவசியமற்றது இந்த அறிமுகம் இல்லாமலேயே அந்த நல்ல கருத்துக்களை அறிய முடியும்
அடுத்தவர் தன்னை அறிந்து கொள்ள வேண்டிய மார்க்க சூழல் மற்றும் அத்தியாவசிய அரசாங்க பதிவுகளுக்கு மட்டுமே தங்களை முறையாக வெளிக்காட்டுவதை தவிர ஒரு இஸ்லாமிய பெண் அந்நியர்களின் பார்வை மற்றும் அவர்களின் கவனத்தை திருப்புவதை விட்டும் தன்னை மறைத்து வைத்திருப்பதே சிறந்த முஸ்லிம் பெண்மணிக்கு எடுத்து காட்டாகும் அதுவே குடும்பத்தார்களின் பார்வையில் கண்ணியத்தை பெற்று தரும்
சில நேரங்களில் இது போல் தங்களை பெண்கள் வளை தளங்களில் வெளிப்படுத்தும் காரணத்தால் கணவன் மற்றும் அவர்களின் மாமியாரின் வெறுப்புணர்வுக்கு ஆளாகி வருவதும் அதனால் இல்லறம் நாசமாகி நரகமாகும் சம்பவங்களையும் பல ஜமாத்துகளில் கேள்வி படுகிறோம்
நவீன டெக்னாலஜி பரவி இருக்கும் இந்த சூழலில் ஒழுக்கமான பெண்களையே கீழ்நிலை பெண்களாக சமூக வளைதளங்களின் மூலம் சித்தரிக்கும் இந்த சூழலில் தனது கண்ணியமும் மானமும் மேல் என்ற பக்குவத்தையும் அதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பெண்கள் உணருவது அவசியமானது
தெருவில் நடக்கும் போது நான்கு அந்நிய ஆடவர்கள் பார்த்தால் அதை குறை காணும் பெண்கள் இது போல் தங்களை வெளிப்படுத்தினாலும் பல வகைகளில் அந்நியர்களின் தொல்லை ஏற்படும் என்பதை மூடி மறைத்து புறக் காரணங்களை கூறி வாதிப்பது தர்க்கத்திற்க்கு வேண்டுமானால் நியாயமாக தோணலாம் ஆனால் அதை தவிர்ப்பதே சிறந்தது
எதார்த்தமாக மார்க்கம் அனுமதித்த ஒன்றின் மூலம் பல தீமைகளே சமூகத்தில் கயவர்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்று இருந்தால் அந்த அனுமதியை தவிர்த்து கொள்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியம் அல்ல
பெண்கள் தங்கள் முகத்தை புர்கா அணிந்து பொது இடத்தில் மூடி செல்வதும் மார்க்க அனுமதியே முகத்தை மாத்திரம் திறந்து செல்வதும் மார்க்க அனுமதியே
ஆனால் திருடர்களும் ஒழுக்க கேடுகளை தொழிலாக செய்யும் பெண்களும் புர்காவை முகத்தில் அணிந்து தங்கள் தவறுகளை மூடிமறைக்கும் வேளையில் மார்க்கம் அனுமதித்த முறையில் பொது இடத்தில் முகத்தை மாத்திரம் திறந்து செல்வது குற்றம் இல்லை அதே போன்ற ஒரு நிலையில் தான் சமூக வளைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களையும் அதன் அடையாளங்களையும் வெளிப்படுத்துவது அமைந்து உள்ளது
ஊராருக்காக உடலுக்கு போடும் பர்தாவை விட இறையச்ச அடிப்படையில் ஆசைகளை தூண்டும் உள்ளத்திற்க்கு போடும் இறையச்சம் எனும் பர்தாவே மேலானது முதலானது என்பதை பெண்கள் தெளிவாக உணர வேண்டும்
இது ஆண்களை தவிர்த்து பெண்களை மட்டப்படுத்தும் பதிவு அல்ல மாறாக தீய ஆண்களின் சூழ்ச்சியில் இருந்து
பெண்களின் கண்ணியத்தை காக்கும் அறிவுரை பதிவே இது
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர் அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்
(அல்குர்ஆன் : 66:6)
24 -அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்
உடனே அவரை
(கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள்
ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி
J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வேர்கிளம்பி குமரிமாவட்டம்
கட்டுரை தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் தகவல் தொடர்புக்கு — 9994533265