Home » குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!

குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!

by admin
0 comment

வெள்ளை தாளில் கரும்புள்ளி தென்பட்டால் அதன் வெள்ளை பகுதியை பார்க்காது சிறிதாக இடம் பெற்றுள்ள கரும்புள்ளியை உற்று நோக்குவதும் அதை கடுமையாக விமர்சனம் செய்வது மட்டுமே தீயோர்களின் குணமாக உள்ளது

இது போல் தான் பிறர்களின் குறைகளை மட்டுமே  ஆய்வு செய்வது இன்று  பரவலாக காணப்படுகிறது

ஒருவரின் மீது பட்டுள்ள மலத்தை கேவளமாக விமர்சிக்கும் நாம் அந்த மலத்தை நாமும்  நம் உடலுக்கு உள்ளே சுமந்து கொண்டுள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்

தூய்மையை பற்றி அவர்களுக்கு போதனை செய்யாமல் அவர்கள் அசுத்தமானவர்கள் என்று அவர்களை இழிவு படுத்துவது தூய உள்ளம் கொண்டோரின் நடைமுறை ஆகாது

தனிப்பட்ட எந்த குறைகளை நாம் ஒருவரிடம் பார்த்தாலும் நம்மிடம் இருக்கும் குறைகள் அவர்களிடம் இல்லாது இருப்பதை நாம் அறவே  கண்டு கொள்வது இல்லை

குறைகளை சம்மந்தப்பட்டவரிடம் நேரடியாக எத்தி வைப்பதும் அதை கண்ணியமாக  முறையாக சுட்டிக் காட்டுவதும் தான் நம் கடமையே தவிர பிறர்களின் குறைகளையே குறை கூறி கொண்டு சுற்றுவதும் விமர்சிப்பதும்  தஃவா எனும் அழைப்பு பணி அல்ல

ஆனால் இன்றோ பிறர்களின் தனிப்பட்ட  குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதையே இஸ்லாமிய தஃவா என்று கருதும் மனப்போக்கு அநேகரிடம் காணப்படுகிறது

மார்க்கத்தோடு தொடர்பு வைத்துள்ள பலர்களும் இதில் தங்களை வீரியமாக  ஈடுபடுத்தி வருவதை பரவலாக காண முடிகின்றது

பிறர்களின் குறைகளை அவர்களின் கண்ணியம் கருதி மறைப்பது கூட முஸ்லிம்களின் சிறந்த பண்பு என்பதை மறந்து விட வேண்டாம்

இறந்து போன உடலை குளிப்பாட்டும் நபர்கள் அந்த உடலின் அந்தரங்கத்தில் ஏதாவது குறையை கண்டால் அதை கூட வெளியில் சொல்லாதீர்கள் என்று இறந்து போன ஒருவரின் மானத்தை காக்க சொல்லும்  மார்க்கம் இஸ்லாம்

ஆனால் இன்றோ உயிரோடு உள்ள முஸ்லிம்களின் அந்தரங்க குறைகளை கூறு போட்டு விற்பனை செய்யும் இழி குணம்  கொண்டவர்களாக பலர்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகிறார்கள்

குறைகளே இல்லாத மனிதனும் இல்லை நிறைகளே  நிறைந்த மனிதனும் இல்லை

அவ்வாறு ஒரு படைப்பு இருந்தால் கூட  அதை மனித இனத்தில் சேர்த்து பார்க்க முடியாது

காரணம் அனைத்து மனிதர்களும் சாத்தானிய தூண்டுதலுக்கு சருகி விழும் தவறான ஆசை  எனும் அணுக்களோடும் தான் இறைவனால்  படைக்கப்பட்டுள்ளனர்

பிறரது காதுகள் ஒருவனின் குறைகளை கேட்பதில் ரசனை செலுத்தும் வரை தான் குறைகளை  கூறுபவன் அதை அன்றாடம்  அதிகப்படுத்துவான்

குறைகளை கேட்பதற்கே பிறரது காதுகள் தயார் இல்லை என்று நம் நிலை மாறி  விட்டால் குறை கூறுவோரின் நாவுகள் ஊமையாகி விடும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّٰهِؐ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ، ثُمَّ قَالَ لِي: يَابُنَيَّ وَذلِكَ مِنْ سُنَّتِي وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ

என்னருமை மகனே!

நீர் காலையும், மாலையும் (எல்லா நேரங்களிலும்) உன் மனதில் பிறரைப் பற்றி எந்தக் குறையும் இல்லாத நிலையில் இருக்க முடிந்தால் அவசியமாக அவ்வாறே இருந்து கொள்ளவும்

எனது மகனே!
இது எனது வழியைச் சேர்ந்தது
எவர் எனது வழியை உயிர்ப்பித்தாரோ அவர் என்னை நேசித்தார்
எவர் என்னை நேசித்தாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார் என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்  திர்மிதி

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ

ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள் அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள் மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் ஹாகிம்

J . யாஸீன் இம்தாதி — இமாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வேர்கிளம்பி குமரிமாவட்டம்.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter