தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம், புதுத்தெரு,ஆஸ்பத்திரி தெருவையொட்டிய 12வது வார்டில் உள்ள சாலை அதிகளவில் பெண்கள் ரேஷன் பொருட்கள், மருத்துவ தேவைகளுக்காக உபயோகப்படுத்தும் சாலையாகும்,குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தும் பிரதான சாலையாகவும் உள்ளது. சாலையை ஒட்டி அதாவது புதுப்பள்ளிக்கு எதிரில் உள்ள செட்டியாகுளத்தில் குப்பைகள் கொட்டும் கிடங்காகி வருகிறது.மேலும் இந்த பகுதியில் சாக்கடைகள் சரிவர வெளியேற முடியாமல் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலையில் இருக்கிறது.
சிலநாட்களாக பெய்தும் வரும் மழையை ஒட்டி அப்பகுதியில் தண்ணீருடன் குப்பைகளும் சேர்ந்து கொண்டு சுற்றுச்சூழல் மாசடைந்து,குளம் முழுவதும் குப்பையாக காட்சி தந்து நாற்றம் அடிக்கிறது.இதனால் அப்பகுதியில் டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் ஆபத்து இருக்கிறது.
அதிரை பேரூராட்சி இதனை கண்டும் காணாமல் இருக்கிறது.அந்த தெருவில் தன்னார்வ அமைப்புகளால் வைக்கப்பட்ட குப்பை கூண்டு முழுவதும் குப்பைகள் நிரம்பி பேரூராட்சி நிர்வாகம் சரிவர அந்த பகுதியின் குப்பைகளை எடுக்காமல் இருப்பதால் வேறு வழியின்றி பொதுமக்களும் கூண்டினை சுற்றியும்,குளத்தினை சுற்றியும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியதாவது: பேரூராட்சி நிர்வாகம் டெங்கு பாதிப்பு பற்றி வீடுவீடாக கணக்கெடுப்பிற்கும்,விழிப்புணர்வும் கொடுப்பதற்கு பெண்களை அனுப்பி வைக்கிறது.ஆனால் டெங்கு பாதிப்பு உருவாகின்ற அளவிற்கு சுகாதர சீர்கேடான இப்பகுதியை எந்தவொரு அதிகாரியும் கண்டுகொள்வதில்லை.அரசு நினைக்கிறது பாதிப்பு வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எழுதப்படாத விதி இங்கு செயல்பாட்டில் உள்ளது போல் அதிரை பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து 12வார்டை புறக்கணித்து வருகிறது.
மேலும் அவர்கள் கூறுகையில் அரசியல் கட்சியினரும் தேர்தல் நேரங்களில் மட்டும் தான் வாக்கு கேட்டு வருகின்றனர். இதுபோன்ற அவல நிலையை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை யாரும் கண்டித்து ஆர்ப்பாட்டமோ,போராட்டமோ செய்வதில்லை என்று குற்றஞ்சாட்டினர்.