மும்பை
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மூடப்பட உள்ளதால் 3000 பணியாளர்கள் பணி இழக்க நேரிட்டுள்ளது.
நவி மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்) நிறுவனம் இன்னும் 2 வாரங்களில் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் தொலை தொடர்புத்துறையில் ஜாம்பவானாக இருந்த நிறுவனம் தற்போது ரூ.44300 கோடி கடனுடன் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி தனது சகோதரர் முகேஷ் அம்பானி துவங்கிய ஜியோ நிறுவனத்தால் முழுவதுமாக வியாபாரத்தை இழந்துள்ளார்.
இந்த நிறுவனம் மூடப் படுவதால் சுமார் 3000 பேர் பணி இழக்க நேரிடும் என தெரிய வருகிறது. ஊழியர்களில் பலரை ராஜினாமா செய்ய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜினாமாக் கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டு விலகுவதாக குறிப்பிடுமாறு கூறி உள்ளது. அத்துடன் அக்டோபர் ஒன்றாம் தேதியிட்டு ராஜினாமாக் கடிதம் தருமாறு நிர்வாகம் கூறி உள்ளதால் இழப்பீடு வராது என பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் பணம் பற்றியும் எதுவும் தெரியாமல் பலர் உள்ளனர். முதலில் ஆர் காம் லிமிடட் என இருந்த நிறுவனம் பிறகு ஆர் காம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் ஊழியர்களின் பிராவிடண்ட் ஃபண்ட் பணமும், நிறுவனத்தின் பங்களிப்பும் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கில் பலருக்கு செலுத்தப் படாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஊழியர்களிடையே மேலும் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது.
இது குறித்து ஊடகங்கள் ஆர் காம் நிறுவனத்திடம் கேட்டதற்கு நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூடல் : 3000 பேர் பணி இழப்பு!!
116
previous post