புதுடில்லி : உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018 ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
இது தொடர்பாக விமானநிலைய கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2018 ம் ஆண்டு முதல் கோல்கட்டா, ஆமதாபாத், விஜயவாடா தவிர மற்ற விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர், தங்களின் ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைக்க வேண்டும். ஆதார் அடிப்படை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய திட்டத்தால், பயணிகள் விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் போது அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை சோதிக்கப்படும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர் எந்த விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார், எங்கு செல்கிறார் என்ற விபரங்களை பெற முடியும். பரிசோதனையின் போதே அவரைப் பற்றிய முழு விபரங்களும் தெரிந்து விடும்.
இதனால் பயணிகள் அடையாள அட்டைகள், பேப்பர் டிக்கெட்கள், போர்டிங் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாகும். ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதற்கான பார் கோடு டிக்கெட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.