மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உணவு பாதுகாப்புத் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கையெழுத்திட்டதால், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ரேஷன் கடைகளில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்படும் என நியாயவிலைக்கடை ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் சர்க்கரையின் விலையை அண்மையில் மாநில அரசு உயர்த்தியது. உணவு பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசு கையெழுத்திட்டதின் விளைவால் மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த மானியம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சர்க்கரை விலையை உயர்த்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்க்கரை விலை உயர்வு ஏழை –எளிய மக்களின் தலையில் இடியாக இறங்கியுள்ள இந்நிலையில் அடுத்த பேரிடியை மக்களுக்கு தர உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தயாராக உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் ஜனவரி மாதத்தில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் விருப்பத்தை மீறி உணவு பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசு கையெழுத்திட்டாலும், பொதுவினியோக திட்டம் தங்கு தடையின்றி நடைபெறும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போதே ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவதில் பாகுபாடு வந்துவிட்டது. இதே நிலை அடுத்ததாக அரிசி, மண்எண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களிலும் ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் நியாவிலைக்கடை ஊழியர்கள்..
இதனால் பொது வினியோகத்திட்டம் கேள்விக்குறியாவதோடு மட்டுமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு, பொது வினியோக திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் வரத்தொடங்கி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில் 40 சதவீதம் உளுந்தம் பருப்பு, 60 சதவீதம் துவரம் பருப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், விலை ஏற்றம் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் உளுந்தம் பருப்பு வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
துவரம் பருப்புக்குப் பதில் தற்போது மசூர் பருப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பருப்பை பொது மக்கள் வாங்குவதில் என்றாலும் தொடர்ந்து அந்த பருப்பை விற்பனை செய்ய ஊழியர்கள் வற்புறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு மசோதா என்பது ஏழை –எளிய மக்களுக்கு எதிரானது என எதிர்கட்சிகளும், சமுக ஆர்வலர்களும் தொடர்ந்து கூப்பாடு போட்டும், பாஜக அரசின் நிர்பந்தத்துக்கு தமிழக அரசு அடிபணிந்ததால் பொது வினியோக திட்டம் மக்களுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது..