Home » தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கினார் முதல்வர்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கினார் முதல்வர்!

0 comment

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மதுரையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், படுகாயமடைந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு மதுரையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட அப்போதய முதல்வர் பழனிசாமி கடந்த 27.5.2018 அன்று உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவும் ஆணையிட்டதை அடுத்து 18 நபர்களுக்கு முதல்வர் பழனிசாமி கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். ஆனால் அந்த அரசுப்பணி தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மதுரைக்கு இன்று வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலின் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இன்று பணிநியமன ஆணையை வழங்கினார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துப்பாக்கிச் சூட்டில் இறந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு ஏற்கனவே அரசு வேலை தரப்பட்ட நிலையில் கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter