தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு இல்லாத உயிர் இழப்புகள் 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், ஊடங்கை தமிழக அரசு அமல்படுத்தி தொற்றை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் உன்னதமான சேவையை பல்வேறு அமைப்புகளும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றம் கழகம் சார்பில் பல்வேறு சேவைகள் செய்து வருகிறது.
ஆக்சிஜன் தட்டுப்பட்டால் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். அதனை கருத்தில்கொண்ட தமுமுகவினர் ஆட்டோ ஆம்புலன்ஸ் என்னும் பெயரில் ஆட்டோவில் ஆக்சிஜனுடன் வைத்து அவசரகால தேவை உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களை தொடர்புகொண்டால் நேரில் சென்று அவசரகால அடிப்படையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு ஆக்சிஜன் அமைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்து வருகின்றனர்.
மேலும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் ஏழை மக்கள் அதிகமானோர் உணவுக்கு வழியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை பூர்த்தி செய்யும் வகையில் பசியில் தவிக்கும் மக்களுக்கு உணவு சமைத்து சாலை ஓர மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களின் உடலை குடும்பத்தார்கள் அடக்கம் செய்யமுடியாத நிலை இருப்பதால் அதனையும் பூர்த்தி செய்யும் வகையில் மத வேறுபாடுயின்றி நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
பல்வேறு சேவைகளை செய்து வரும் தமுமுகவிற்கு பொதுமக்கள் நன்றியும் , பாராட்டுகளையும் செய்து வருகின்றனர். புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். நீங்கள் உதவ வேண்டும் என நினைத்தால் தாராளமாக பொருளாதார உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்துள்ளனர்.






