தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அப்போது உதவி மையத்தை ஆய்வு செய்த அவர், மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மைய பணிகளை வெகுவாக பாராட்டினார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ கூறியதாவது :
கொரோனாவின் முதல் அலை முதல் இதுவரை சுமார் 5000க்கும் அதிகமான உடல்களை அடக்கம் செய்திருக்கின்றோம், அங்காங்கே கோவிட் உதவி மையங்கள் அகைக்கப்பட்டு மக்களுக்கு உதவி வருகின்றோம். ஆம்புலன்ஸ் சேவை, ஆக்ஸிஜன் சேவை, நலத்திட்ட உதவிகள் என பணிகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று பிறகு சொன்ன வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம் சம்பந்தமான திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கினார். மேலும் சமீபத்தில் மரணமடைந்த கபார் அவர்களின் இல்லத்திற்கு சென்று உறவினர்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், சமீபத்தில் விபத்துக்குள்ளான மதுக்கூர் தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் பாரதி தமிழ் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் மமக மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, தமுமுக மமக பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். தமுமுக செயலாளர் பைசல் அகமது, மமக செயலாளர் தாஜுதீன், பொருளாளர் முகமது சேக் ராவுத்தர், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பவாஸ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் புரோஸ்கான், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.









