Home » மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் ? ‘யாருக்கு தெரியும்’ என கையை விரித்த ஒன்றிய அரசு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் ? ‘யாருக்கு தெரியும்’ என கையை விரித்த ஒன்றிய அரசு!

0 comment

தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ரூ.1,264 கோடி மதிப்பில், சுமார் 201.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக ஜப்பான் நிறுவனம் மற்றும் மத்திய அரசு இடையே ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு, மாநிலத்தையும், மாநிலம், மத்திய அரசையும் குற்றம்சாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஜெயிப்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையும் ஒரு காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏனெனில் தற்போது சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை மக்களிடம் காட்டியே வாக்கு கேட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதேபோல் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களின் பிரசார பொருளாக மதுரை எய்ம்ஸ் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று தெரியாது என மத்திய அரசு கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(ஆர்.டி.ஐ) கீழ் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து விவரங்கள் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ‘ திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கும் தேதி தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.இதனை கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவு தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

எத்தனை கட்டங்களாக பணிகள் நடைபெறும் மற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன கட்டிடங்கள் வரும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. விரிவான திட்ட மதிப்பீடு பற்றிய தகவல்களும் இல்லை’ என்று கூறியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்திய அரசின் இந்த பொறுப்பற்ற பதிலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter