வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அவர் மீது பதியப்பட்ட வழக்கின் மீதான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை போலீஸார் இந்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதில் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2013லிருந்து 2021ஆம் ஆண்டுவரை சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது எவ்வளவு சொத்து மதிப்புகளை தெரிவித்திருந்தார், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வளவு சொத்து மதிப்பு தாக்கல் செய்திருந்தார் என்பதை ஆய்வுசெய்து இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அவர் வாங்கிய சொத்துக்களுடைய விவரம் அனைத்தும் இந்த முதல் தகவல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
டிப்பர் லாரி, ஜேசிபி, பிஎம்டபிள்யூ கார், 55 சவரன் நகை, சொத்து ஆவணங்கள், நிலம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவருடைய பெயரிலும் அவருடைய மனைவி மனைவி பெயரிலும் உள்ள சொத்துகள் அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த அறிக்கையில் மதர் தெரசா பெயரில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக்கல்லூரி என 14 கல்வி நிலையங்களை அவர் நடத்திவருவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.