நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள “ஜெய்பீம்” படம் ஓடிடியில் வெளியாகி அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சிலர் படத்திற்கும் நடிகர் சூர்யாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக “ஜெய்பீம்” பட சர்ச்சை வேகமாக சமூகவலைதளத்தில் பரவத் தொடங்கியது. குறிப்பாக நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட விமர்சனங்களும் தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. இதனை கண்டித்து சமூக வலைத்தளங்களில் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேக்கில் திரையுலகினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆயுதப்படை போலீசார் சூர்யாவின் வீட்டில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.
சூர்யா தரப்பில் இருந்து பாதுகாப்பு கேட்டு எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், உளவுத்துறை தகவலின்படி நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு 5 ஆயுதம் ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நடிகர் சூர்யாவிற்கென்று தனியாக 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூர்யா செல்லும் இடங்களுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உடன் சென்று பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.