31ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அதிரை நகராட்சியில் குப்பைகளை அள்ளுவதற்கு வெறும் ஒரு டிராக்டர், ஒரு மினி லாரி மற்றும் 2 பேட்டரி மினி வாகனங்கள் மட்டுமே உள்ளன. வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து இந்த வாகனங்களே குப்பைகளை பெற்று குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனங்கள் வரும் வரை மணிக்கணக்கில் தள்ளுவடிகளிலேயே வைத்துக்கொண்டு தூய்மை பணியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நகராட்சி மன்றம் கவனத்தில் கொண்டு புதிய வாகனங்கள் வாங்கி தூய்மை பணியாளர்களின் நேரம் வீணடிக்கப்படுவதை தடுத்து அவர்களை பிற பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கூட்ட அரங்கு கட்டுவதற்கு ஆர்வம் காட்டும் அதிரை நகராட்சி, இனியாவது எது முதல் தேவை என்பதை அறிந்து செயல்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிரை நகராட்சிக்கு புதிய கூட்ட அரங்கு அப்புறம் கட்டலாம்! முதல்ல இதை கவனிங்க மாமன்றமே!
139