336
அங்கமும் ஆன்மாவும் நோன்பிருந்துத்
தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சக்காத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
ஆக்கம்:
“கவியன்பன்” கலாம்,