Home » அதிரைக்கு 110Kv துணை மின்நிலையம் கொண்டுவந்தது யார்? சுயநலத்திற்காக சர்ச்சையாக்கப்படும் வளர்ச்சி திட்டம்!

அதிரைக்கு 110Kv துணை மின்நிலையம் கொண்டுவந்தது யார்? சுயநலத்திற்காக சர்ச்சையாக்கப்படும் வளர்ச்சி திட்டம்!

by அதிரை இடி
0 comment

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இயங்கி வரக்கூடிய பல்வேறு அரசு அலுவலகங்களின் இடங்கள் ஊரின் நன்மைக்காக தாராள மனம் கொண்ட நல்லோர்களால் இனாமாக கொடுக்கப்பட்டதாகும். இதற்கு உதாரணமாக நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், துணை மின்நிலையம், ஃபாத்திமா நகர் மேல்நிலை குடிநீர் தொட்டி, சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகள் அமைந்திருக்கும் இடங்களை குறிப்பிட்டு சொல்லலாம். இதற்காக அரசிடம் இருந்து எந்தவித சலுகைகளையும் அவர்கள் எதிர்பாக்கவில்லை. ஆனால் ஊரின் நன்மைக்காக ஒருஜான் இடத்தை கூட தானமாக கொடுக்க தயாராக இல்லாத சில புள்ளிகள் அடங்கிய குழு, தங்களது செல்வாக்கினால் தான் அதிரை அதிரடியாக வளர்ச்சி அடைகிறது என்கிற பிம்பத்தை கட்டமைக்க முயல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக தற்போது அதிரையில் நடைபெற்று வரக்கூடிய 110Kv துணை மின்நிலைய பணிக்கு தாங்கள் மட்டுமே முக்கிய காரணம் என்று கூறி அரசியல் ஆதாயமடைய பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் ஒரே ஆண்டில் ஒரே சந்திப்பில் ஒரே நொடியில் ஒரே நபரால் இந்த திட்டம் அதிரைக்கு கிடைத்துவிட வில்லை. இதற்காக சுமார் 12 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாடுபட்டவர்கள் ஏராளம். அவர்கள் எல்லாம் அமைதியாக இருந்து ஊரின் வளர்ச்சியை கண்டு மகிழ்கின்றனர்.

2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு மக்கள் தொகை பெருக்கம், மின் பயன்பாடு அதிகரித்தல் போன்ற காரணங்களால் அதிரையில் 110kv துணை மின்நிலையத்தை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கின. அதற்கான செயல்திட்டங்களும் தீட்டப்பட்டன. அன்று முதலே இந்த திட்டம் குறித்து மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. ஆனால் இடம் தேர்வு செய்தலில் தாமதம், நிதிபற்றாக்குறை உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் அதிரை 110kv துணை மின்நிலைய திட்டம் செயல்வடிவம் பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. அவ்வபோது இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இந்த சூழலில் தான் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரையிடம் குறைந்த அழுத்த மின்சாரத்தை சுட்டிக் காட்டி அதனை போக்க அதிரையில் 110kv துணை மின்நிலையத்தை அமைக்க தாங்கள் முயற்சிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வான பிறகு அதே ஆண்டில் மின்சாரத்துறை அமைச்சரிடம் அதிரை 110kv துணை மின்நிலையம் குறித்து மக்களின் சார்பில் வலியுறுத்தினார். ஓராண்டு கழித்து அந்த திட்டத்தை செயல்படுத்த கிரீன் சிக்னல் கொடுத்தார் அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே இதுதொடர்பாக MMS.அப்துல் கரீம் தலைமையில் அமைச்சரையும் சந்தித்தனர்.

அதிமுக ஆட்சியிலேயே செயல் திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பெரிதாக சவால்கள் ஏதும் இருக்கவில்லை. இதனால் அந்த திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து ஏற்கனவே 33kv துணை மின்நிலையம் இருக்க கூடிய இடத்திலேயே 110kv துணை மின்நிலையத்தையும் விரைவாக அமைக்க பணியை துவக்கிவிட்டது திமுக அரசு.

இந்நிலையில் பலரது கூட்டு முயற்சியால் மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கும் இந்த மகத்தான திட்டத்தை தாம் மட்டுமே முயற்சி செய்து பெற்றதாக சிலர் சமூக வலைத்தளங்களில் எழுதியும் பரப்பியும் வருகின்றனர். குறிப்பாக தங்களது முகத்தை முன்னிலை படுத்த முயலும் இத்தகைய நபர்களிடம் இருந்து அதிரை மக்கள் சற்று விலகி இருப்பதே சாலசிறந்தது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter