பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முன்பு இன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை அமைப்பின் தலைவரும், அதிரையில் ரயில் சேவைக்காக பலகாலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவருமான அஹமது அலி ஜாபர் அழைப்பு விடுத்திருந்தார்.
வாரம் மும்முறை இயக்கப்படும் தாம்பரம் – செங்கோட்டை(வண்டி எண் 20683/20684) அதிவிரைவு ரயிலுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க கோரியும், மீட்டர் கேஜ் காலத்தில் திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இதே வழித்தடத்தில் இயக்க கோரியும், கூடுதல் ரயில் சேவைகளை அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திற்கு வழங்க கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிரையர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் திமுக நகர செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான இராம. குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர் பேசிய அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹமது அலி ஜாஃபர், ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பல்வேறு ஜமாஅத்களின் நிர்வாகிகள், ரயில் ஆர்வலர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.










