அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து மக்கள் அவதி.
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டின் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த மழை பெருமளவில் தேங்கி நின்று, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல நாட்களாக மழை நீர் குறையாததால், வீதிகள் மட்டுமன்றி வீடுகளின் முன்புறங்களும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
அப்பகுதி மக்களின் கூறுகையில், நீண்டநாளாகக் கோரிக்கை வைத்தும் சரியான வடிகால் அமைப்பு செய்யப்பட்டாதலால், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்தப் பிரச்சனை தொடர்வதாக கூறுகின்றனர். மழைநீர் வெளியேற்றப் போதிய கால்வாய்கள் இல்லாததால், குடியிருப்பு பகுதி முழுவதும் சதுப்பு நிலமாக மாறியுள்ளதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், தொடர்ந்து தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக வீடுகளுக்குள் விஷ ஜந்துக்கள் நுழைவது அதிகரித்துள்ளதாகவும், மக்கள் கவலைத் தெரிவித்தனர். கொசு பரவல் அதிகரித்து, நோய் தொற்றும் அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
“வரிவசூலுக்கு காட்டும் அக்கறையை மக்கள் நலனிலும் காட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்,மேலும் உடனடியாக வடிகால் வசதிகளை மேம்படுத்தி, மழைநீரை அகற்றும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








