பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு போலீஸ் தரப்பில் புல்லட் நாகராஜன் என்று பெயர் தரப்பட்டுள்ளது. காரணம், இவர் புல்லட்டில் பயணித்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டவர் என்பதால்.
சமீபத்தில் வாட்ஸ் ஆப் ஆடியோ மூலமாக பெண் எஸ்பி ஊர்மிளா, இன்ஸ்பெக்டர் மதனகலா, தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் புல்லட். இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை பெரியகுளத்தில் உள்ள சர்ச்சுக்கு அருகே வைத்து போலீஸார் புல்லட் நாகராஜனைக் கைது செய்தனர். போலீஸார் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க முயன்றுள்ளார் புல்லட். இதையடுத்து போலீஸார் பலப்பிரயோகம் செய்து அவரை மடக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிடிபட்ட புல்லட் நாகராஜனை பைக்கிலிருந்து கீழே இறக்குகிறார் போலீஸ் சீருடையில் இல்லாத ஒருவர். சட்டையை கெத்தாக பிடித்தபடி அவரை இழுத்துச் ஜீப்பை நோக்கி செல்ல முயல்கிறார். அப்போது புல்லட் நாகராஜன் திமிறி விடுபட முயல்கிறார். உடனே அந்த சீருடையில் இல்லாத நபர், ஓங்கி நாகராஜனின் பின்னந்தலையில் (பொடணி) ஓங்கி அடிக்கிறார். பின்னர் ஜீப்பை நோக்கி இழுத்துச் சென்று உள்ளே தள்ளுகிறார்.
பொது மக்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது..