Home » பொள்ளாச்சி விவகாரம் : போராடிய மாணவரின் கன்னத்தில் அறைந்த புதுக்கோட்டை எஸ்.பி !

பொள்ளாச்சி விவகாரம் : போராடிய மாணவரின் கன்னத்தில் அறைந்த புதுக்கோட்டை எஸ்.பி !

0 comment

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்த சாமி உட்பட மாணவர் அமைப்பினர் சிலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமையில் அங்கு திரண்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல வலியுறுத்தினர். மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து, தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர். கல்லூரியிலிருந்து மாணவிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட சாலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இதையறிந்த ஆசிரியர்கள் அவர்களை வெளியே செல்ல விடாமல் தடுத்து கதவை அடைத்தனர். தொடர்ந்து போலீஸார் பேச்சுவார்த்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தைத் தூண்டியதாக, மாணவர் சங்கத்தைச் சேர்ந்த அரவிந்த சாமி மற்றும் சிலரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கி வந்த எஸ்.பி செல்வராஜ் அரவிந்த சாமி என்ற மாணவர் சங்க நிர்வாகியைக் கன்னத்தில் அறைந்துள்ளார். மற்ற போலீஸாரும் சேர்ந்து மாணவர் சங்க நிர்வாகிகளைத் தாக்கியுள்ளனர். இதில், அரவிந்த சாமி மற்றும் மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் போலீஸார் வாகனத்தை நான்குபுறமும் மறித்து கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில், கைது செய்து வேனில் ஏற்றிய மாணவர்களை போலீஸார் விடுவித்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் வரையிலும் போராட்டம் நீடித்தது. இந்தச் சாலை மறியல் போராட்டத்தால், புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.எஸ்பி மற்றும் போலீஸார் தாக்கியதில் காயமடைந்த அரவிந்த சாமி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டாவது நாளாகக் கல்லூரி வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter