Home » வாட்ஸ் அப் வதந்திகளும், விபரீத முடிவுகளும்…!

வாட்ஸ் அப் வதந்திகளும், விபரீத முடிவுகளும்…!

0 comment

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதைவிட அதிகமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தேஅறிவியல் தொழில்நுட்பம் ஆக்கமா? அழிவா? என்பதை அறிய முடியும்.

காலம் காலமாக செய்திகள் வேகமாக செல்வதற்கு நிறைய வழிகள் இருந்தன. போரில் பெற்ற வெற்றியை தம் நாட்டு மக்களுக்கு சொல்வதற்காக வீரன் ஒருவன் பல கி.மீட்டர்கள் ஓடியே வந்ததும் உண்டு. காலமாற்றத்தில் தந்தி அறிமுகமாகிறது. தொலைவில் நடைபெறும் செய்திகள் சில வார்த்தைகளில் சுருக்கி அனுப்பும் தந்திமுறை பல ஆண்டுகளாக வேகமாக தகவல்களைப் பரப்பின. அப்படிப்பட்ட தகவல்கள் உண்மையானவை.

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு அதை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு பரப்பப்படும். ஆனால் தற்போது தொழில்நுட்பவசதிகள் பெருகிப் போய் கிடக்கின்றன. கனடாவில் நடக்கும் கலைநிகழ்ச்சியும், சுமத்ரா தீவில் ஏற்பட்ட சுனாமியும் அடுத்த நொடியில் அகில உலகத்தின் பார்வைக்கு கிடைக்கிறது. ஆனால் அதே தொழில்நுட்பத்தினால்தான் பேராபத்துகளும் ஏற்படுகின்றன. அணு ஆயுதம் என்ற ஒன்றைத் தயாரித்து வைத்துக்கொண்டு உலக நாடுகள் வல்லரசுகளாக மாற போட்டி போடுகின்றன. ரசாயன ஆயுதங்களால் உலகையே மிரட்டிவருகின்றன கொரிய நாடுகள். ஆக தொழில்நுட்பம் ஆபத்தையும் தருகிறது. அசுர வளர்ச்சியையும் தருகிறது.

தற்போது கொஞ்ச காலங்களாக தகவல் தொடர்பில் இணையதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. கைகளில் அலைபேசியை எடுத்துக்கொள்கிறோம். முகம் கழுவுகிறோமோ இல்லையோ முகநூலில் மூழ்கிவிடுகிறோம். அதேபோல் கொஞ்சம் லைக்குகள், கொஞ்சம் கமெண்டுகள் போடாமல் இரவுத் தூக்கமும் சாத்தியமில்லை. இன்னும் இருக்கின்றன டுவிட்டர், இன்ஸ்டாகிராம். டிக்டாக்.. ஷேர்சாட் இப்படி பல அப்ளிகேஷன்கள் அன்றாட வாழ்வில் அட்டைப்பூச்சியாய் ஒட்டிக்கொண்டு ஒவ்வொருவர் வாழ்வின் பொன்னான நேரத்தையும் கரையான் போல் அரித்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் படம் பார்க்க செல்போன் தராத முதலாளியை தொழிலாளர்கள் அடித்துக்கொன்ற நிகழ்வும் இங்கேதான் நடக்கின்றன. ஆக இணைய தளங்கள் இன்று கண்களை இமைக்கவிடாமல் இருக்கச் செய்கின்றன.

இணையதளங்கள் இல்லாத வீடே இல்லை எனலாம். குக்கிராமங்களிலும் அலைபேசியின் வடிவில் இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சமூக வலை தளங்கள் பல போராட்டங்களுக்கு துணையாகவும் இருந்திருக்கின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், சென்னையில் வெள்ளம் வந்தபோதும் முகநூல்களும், வாட்ஸ்-அப்களும், டுவிட்டர்களும் ஈடில்லா உதவியைச் செய்தன என்பதை ஒருபோதும் மறுப்பதிற்கில்லை. ஸ்டெர்லைட் பிரச்சினையில் சமூக வலைதளங்களின் உதவியால் மீண்டும் மீண்டும் மக்கள் கூடி போராட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் என தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நெட்வொர்க்கையே தடை பண்ணியதும் நடந்தது. பிரச்சினை என்னவென்றால் ஒருமுறை வந்த வெள்ளத்தின்போது செய்யப்பட்ட உதவிகள், உதவி செய்த நபர்களின், உதவிய நிறுவனங்களின் தொலைபேசி எண்கள் அடுத்த வெள்ளத்தின் போதும் அப்படியே பரப்பப்படுகின்றன. பரப்பப்படும் அச்செய்திகள் எவ்வளவுக்கு உண்மையானவை என்று யாரும் பார்ப்பதில்லை. பலரும் தமக்கு வந்த செய்தியை அப்படியே நண்பர்களுக்கு பகிர்கிறார்கள்.

திருடியது ஒருவேளை உணவுக்கான அரிசியை என்ற போதும் அடித்துக்கொன்ற உலகில்தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே உள்ள அத்திமூரில் இருக்கும் குலதெய்வம் கோவிலுக்கு சாமிகும்பிட வந்த ருக்மணி என்ற பெண்ணையும், அவரது மருமகன் கஜேந்திரனையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. ருக்மணியும், கஜேந்திரனும் அடித்துக் கொல்லப்பட்டார்கள். ஏன்? வாட்ஸ்அப் வதந்திகளால். குழந்தைகளைக் கடத்தும் வடமாநில கும்பல் நடமாடுகிறது. அவர்கள் வழிகேட்பதுபோல் குழந்தைகளைக் கடத்துவார்கள், சாக்லெட் தருவார்கள் அப்படியே குழந்தைகளைக் கடத்துவார்கள் என்ற தகவல் அனைவரது மொபைலிலும் வந்திருக்கும். அதேபோல் ஒரு தகவல்தான் அந்த ஊரிலும் பரவியிருந்திருக்கிறது. அன்பு பாசம் என்பதையே ஆடையாக அணிந்திருக்கும் பாட்டி ருக்மணி அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு சென்னையிலிருந்து பேரப்பிள்ளைகளுக்கு கொண்டு வந்திருந்த சாக்லெட்டுகளை தந்திருக்கிறார். இதைப் பார்த்த ஊர் மக்கள் ஏதோ குழந்தைகளைக் கடத்தும் கும்பல்தான் என்று ஆளாளுக்கு அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ருக்மணியும் கூட வந்தவர்களும் எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்கவில்லை. அடித்தேக் கொன்றுவிட்டார்கள். மருமகன் கஜேந்திரன் மூன்று மாத சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இறந்துவிட்டார். இன்று அம்மாவையும் கணவரையும் இழந்து இரண்டு குழந்தைகளோடு எப்படி வாழ்வது என்று தவித்திருக்கிறதே அந்தக்குடும்பம் யார் காரணம்? எதையும் தீர விசாரிக்காமல் ஆத்திரத்திலும், அவசரத்திலும் எடுக்கும் முடிவுகள் தவறானதாகவே முடியும். அதற்காக விழிப்புணர்வோடு இருக்க கூடாதா? என்ற ஆதங்கமும் கேட்கவே செய்கின்றன. ஆனால் வரும் தகவல்களை எல்லாம் தீர விசாரிக்காமல் ஏன் முழுவதும் படிக்காமல் கூட பகிருவதால் தான் இத்தனைக் கொடூரங்களும் அரங்கேறுகின்றன.

அம்மா.. அம்மா.. அம்மா என்று டைப் செய்து 21 பேருக்கு அனுப்பினால் உங்கள் அம்மாவின் ஆயுள் அதிகரிக்கும். குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்துவிட்டது. ஆதலால் குடிக்கவேண்டாம்.. என வதந்திகள் விதம் விதமாக பரவுகின்றன.

இப்போது தேர்தல் நேரம் வந்துவிட்டதால் இவருக்கு வாக்களித்தால் இவ்வளவு ரூபாய் ரீசார்ஜ் செய்யப்படும். இவ்வளவு டேட்டா ஜிபி இலவசமாக வேண்டுமா பகிருங்கள். இப்படி விதவிதமாக வதந்திகள் பரவுகின்றன. 250 ரூபாய்க்கு இலவச போன் என்றதும்.. எத்தனை பேர் பணம் கட்டி ஏமாந்துபோனார்கள். வதந்தி பரவுதலுக்கு வாட்ஸ்அப் இப்போது மிகவும் பயனுள்ளதாக மாறிவிட்டது. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் தன்னிகரில்லாத தந்தி சேவை விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டது. தந்தியின் சேவையை இன்று சமூக வலைதளங்கள் ஏற்றுக்கொண்டன. மழைநாட்களில் விடப்படும் விடுமுறைகளும், தலைநகரில் நடக்கும் நடப்புச் செய்திகளும் உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் வலம் வந்துவிடுகின்றன. ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

இன்னொரு நிகழ்வு சமீபத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் டூயட் பாடுவதுபோல் ஒரு காணொலி வேகமாகப் பரவியது. அடுத்த நாள் அவர்கள் நாடக நடிகர்கள் என்றும், அவர்கள் ஒத்திகை பார்க்கும்போது எடுத்த வீடியோ என்றும் அவர்களே பேட்டி அளித்திருந்தார்கள். இன்று தினம் தினம் வாட்ஸ்-அப்பில் பல்வேறு செய்திகள் வீடியோக்கள், இருவர் பேசிய ரகசிய உரையாடல் இப்படி பல செய்திகள் தினம் தினம் வலம் வருகின்றன. நாம் செய்ய வேண்டியது வரும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை வாசித்தும், அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்தும் அதைப் பிறருக்கு பகிர்ந்தால் நன்மை பயக்கும். மாறாக எல்லா தகவல்களையும் கண்ணை மூடிக்கொண்டு அனுப்பினால் அதனால் கெடுதல்களையேச் சந்திக்க நேரிடும். நம்மால் அந்தச் செய்தி அனுப்பப்படவில்லை என்றால்கூட பரவாயில்லை ஒரு போலியான தகவலை அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் நாமும் அனுப்பிடக்கூடாது என்ற உறுதிமொழியை ஒவ்வொருவரும் ஏற்று செயல்பட்டால் சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்கலாம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter